மனிடோபா மாகாணம் முழுவதும் அறிவிக்கப்பட்ட காட்டுத்தீ அவசரகால நிலை, தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஓரளவு வெற்றியளித்தமை காரணமாகவே, அவசரகால நிலை அறிவிப்பை மனிடோபா அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.
எனினும், மாகாணத்தில் வாழும் பல சமூகங்களுக்கு இன்னும் காட்டுத்தீ அச்சுறுத்தல் நீடிப்பதால், நிலைமை இன்னும் தீவிரமாகவே இருப்பதாக மனிடோபாவின் முதல்வர் வப் கினிவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்ட இந்த அவசரகால உத்தரவு, கிராமப்புற மற்றும் வடக்கு சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுவதற்கு, கட்டாயப்படுத்திய தொடர்ச்சியான காட்டுத்தீ காரணமாக பிறப்பிக்கப்பட்டது.
தற்போது, காட்டுத்தீயை அணைக்கும் தொடர்ச்சியான முயற்சிகள், அண்மைய சாதகமான வானிலை மற்றும் மேனிடோபா மக்களின், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் “நல்ல மனப்பான்மை மற்றும் கடின உழைப்பு” ஆகியவற்றின் காரணமாகவே இந்த அவசரகால நிலை முடிவுக்கு வந்துள்ளது என்று மாகாண முதல்வர் கினிவ் தெரிவித்தார்.