ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பாடசாலைகளின் இறுதி நாட்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.
சில பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில், ஏனைய பாடசாலைகள் குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போதைய வெப்ப அலை, ஈரப்பதம் காரணமாக 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
இது வழக்கத்தை விட “அசாதாரணமானது” என்று கனடாவின் சுற்றுச்சூழல் துறை வானிலை ஆய்வாளர் ஜூலியன் பெல்லரின் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு மட்டுமே இந்த தீவிர வெப்பம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பாடசாலைகள் உடனடி சவால்களை எதிர்கொள்கின்றன.
தீவிர வெப்பம் காரணமாக தேவைப்பட்டால் பாடசாலைகளை மூடுமாறு, கியூபெக் மாகாணத்தின் கல்வி அமைச்சர் பெர்னார்ட் ட்ரைன்வில்லே, அறிவுறுத்தியுள்ளார்.
கனடாவின் மிகப்பெரிய பாடசாலைச் சபையான டொராண்டோ மாவட்ட பாடசாலை சபையும், வெப்பத்தை சமாளிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.