2026 முதல் 2029 வரையிலான காலப்பகுதிக்கான குடியேற்ற இலக்குகளைத் தீர்மானிப்பதற்காக, கியூபெக் மாகாண அரசு பொதுமக்களுடனான ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளது.
நிரந்தரக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு முன்மொழிவுடன், தற்காலிக குடியேற்றவாசிகளில் அதிகளவானோரை நிரந்தரக் குடியேற்ற அந்தஸ்திற்கு மாற்றுவதற்கான கியூபெக் மாகாண அரசின் ஆர்வமானது, சில்லறை வணிகத் துறை தொழிலாளர் சந்தையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் சில்லறை வர்த்தக சபை (RCC) இது குறித்து தங்கள் துறை சார்ந்த அறிக்கையை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க உள்ளது.
அத்துடன், இந்த இலையுதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொது ஆலோசனைகளிலும் அது, பங்கேற்கவுள்ளது.
சில்லறை வணிகத் துறை பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் மூலம் கிடைக்கும் தொழிலாளர்களை நம்பியே உள்ளது.
குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தற்காலிக குடியேற்றவாசிகள் நிரந்தரக் குடியேற்றவாசிகளாக மாறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால், சில்லறை வணிக நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
சில்லறை வணிகர்கள் ஏற்கனவே வேலைக்கான பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்ப முடியாமை, கிராமப்புறங்களில் ஆட்களைத் திரட்டுவதில் சிரமங்கள், பிரெஞ்சு மொழிப் புலமை (francization) மற்றும் புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் போன்றவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்
கியூபெக் மாகாணத்தில் குடியேற்ற இலக்குகள் குறைக்கப்படும்போது இந்தப் பிரச்சினைகள் மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.