கியூபெக் மாகாணத்தின் சுதந்திரம் குறித்து மூன்றாவது முறையாக ஒரு வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் மத்திய அரசு அதிகாரிகள் அதற்கான பதிலடித் திட்டங்களைத் தயார் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கியூபெக் பிரிவினைக் கோரும் ”பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சி” மாகாண அளவிலான கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதுடன், அதன் தலைவர் பால் செயின்ட்-பியர்
பிளமோண்டன், 2026-ஆம் ஆண்டு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமது முதல் பதவிக் காலத்திலேயே வாக்கெடுப்பை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.
பார்ட்டி கியூபெக்வா கட்சியின் இந்த எதிர்பாராத எழுச்சியானது, பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தின் மூத்த ஊழியர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மட்டத்திலான இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்துள்ளது.
கியூபெக் மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், பார்ட்டி கியூபெக்வா கட்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மாகாணக் கருத்துக் கணிப்புகளில் 20 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
கடந்த தசாப்தங்களில் முதல் முறையாக மத்திய அரசாங்கம் பிரிவினைக்கு எதிராகச் செயல்பட வேண்டிய சூழலை கியூபெக் தேர்தல் உருவாக்க வாய்ப்புள்ளதால், அரசியல் வெளிச்சம் இப்போது கியூபெக்கின் மாகாணத் தேர்தலின் மீது குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


