கனடாவின் கனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த ‘பறக்கத் தடைசெய்யப்பட்ட வான் வலயத்திற்குள்’ நேற்று ஒரு சிவில் விமானம் அத்துமீறி நுழைந்துள்ளது.
இதனை அடுத்து, வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளையகம் (NORAD) போர் விமானங்களை அனுப்பி அந்த விமானத்தைத் தடுத்தது.
CF-18 ஹோர்னெட் ரக போர் விமானங்கள் உடனடியாக அந்த விமானத்தைத் தடுத்து நிறுத்த அனுப்பப்பட்டன.
விமானியின் கவனத்தை ஈர்க்க NORAD கனடியப் பிரிவு பல முயற்சிகளை மேற்கொண்ட பின்னரே, “இறுதி எச்சரிக்கை நடவடிக்கைகள்” மூலம் விமானியைத் தொடர்புகொண்டது.
அந்த சிவில் விமானத்தைச் செலுத்திய விமானி பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், காவல்துறை அதிகாரிகளால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.
ஒவ்வொரு விமானியும் தாங்கள் பறக்க உத்தேசிக்கும் வான்வெளியில் உள்ள கட்டுப்பாடுகளை அறிந்து அவற்றைப் பின்பற்றுவது அவர்களின் பொறுப்பு என்பதை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜி7 ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
கல்கரி மற்றும் கனாஸ்கிஸ் ஆகிய இரு பகுதிகளிலும் கடந்த சனிக்கிழமை காலை முதல் தற்காலிக வான்வெளி கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கனாஸ்கிஸ் கிராமத்தை மையமாகக் கொண்டு 30 கடல் மைல் சுற்றளவில் ஒரு பறக்கத் தடை மண்டலம் உள்ளது.
மற்றொரு தடை மண்டலம் கல்கரி சர்வதேச விமான நிலையத்தை மையமாகக் கொண்டு 20 கடல் மைல் சுற்றளவில் உள்ளது.
இந்த இரண்டு பகுதிகளிலும் உள்ள வான் பறப்புத் தடைக் கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.