மொண்ட்ரியல் நகரில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் (STM – Société de transport de Montréal) பெரும் பாதிப்புகள் ஏற்படவுள்ளன.
பொதுப் போக்குவரத்து சேவைகளின் பராமரிப்புப் பணியாளர்கள் ஜூன் 9 முதல் ஜூன் 17 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாக, அவசர நேரங்களைத் தவிர்த்து, மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. கியூபெக்கின் தொழிலாளர் தீர்ப்பாயம் (Quebec’s labor tribunal), STM பராமரிப்புப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
2,400 பராமரிப்புப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், ஒரு வருடத்திற்கும் மேலாக STM நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறந்த வேலை நிலைமைகள், சிறந்த அட்டவணைகள் மற்றும் துணை ஒப்பந்தங்களை குறைத்தல் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கவாதிகள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
