உங்கள் வீட்டில் அடிக்கடி இறால் வாங்குவீர்களா? இறாலை வாங்கினால் எப்போதும் ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் ஹோட்டல்களில் கொடுப்பது போன்று அட்டகாசமான சுவையில் ஒரு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் இறால் நெய் ரோஸ்ட் செய்யுங்கள். இந்த ரோஸ்ட் செய்வதற்கு அளவான பொருட்களே போதுமானது. வெறும் ரசம் சாதம் மட்டும் செய்து, இந்த ரோஸ்ட் செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இப்படி இறாலை சமைத்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இறால் நெய் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* இறால் – 1/2 கிலோ
* உப்பு – சிறிது
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மசாலாவிற்கு…
* வரமிளகாய் – 4
* மல்லி – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச்
* பூண்டு – 3 பல்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்
வறுவலுக்கு…
* நெய் – 1/4 கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* கெட்டித்தயிர் – 1/4 கப்
செய்முறை: * முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இறாலை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, இறால் நீர் விட்டு, அந்த நீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாயை சேர்த்து முதலில் வறுத்து, தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய்யை ஊற்றி உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் கெட்டித்தயிரையும் சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, மசாலா அனைத்தும் இறாலுடன் சேரும் வரை கிளறி, 3 நிமிடம் நன்கு ரோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான இறால் நெய் ரோஸ்ட் தயார்.