பேரிச்சம்பழம் பாரம்பரியமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 4 ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான பேரீச்சம்பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். அதிலும் இதனை ஊற வைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஊறவைத்த 4 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு உங்கள் நாளைத் தொடங்கினால், பல அற்புதமான நன்மைகளைப் பெறலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பேரிச்சம்பழம் பாரம்பரியமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 4 ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பேரீச்சம்பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கை முறை தொடர்பான பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் 4 ஊறவைத்த பேரீச்சம்பழங்களை 1 மாதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் (Health Tips) கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இரும்பு சத்து நிறைந்த பேரீச்சம்பழம், மூளையை சுறுசுறுப்பாக வைப்பதுடன், மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இயற்கையான சர்க்கரையைத் தவிர, பேரீச்சம்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது, நினைவாற்றலை பெருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. தூக்கமின்மை பிரச்சனையை போக்கவும் உதவுகிறது. இயற்கை சர்க்கரை (குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ்) பேரீச்சம்பழத்தில் காணப்படுகிறது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. தினமும் காலையில் ஊறவைத்த 4 பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது, நாள் முழுவதும் ஆற்றலைக் கொடுப்பதால், சோர்வு என்பதே இருக்காது. குறிப்பாக உடல் உழைப்பு செய்பவர்களுக்கு அல்லது கடின உழைப்பு செய்ய வேண்டியவர்களுக்கு இது நன்மை பயக்கும்.
எலும்பு ஆரோக்கியம்
பேரீச்சம்பழத்தில் எலும்புகளை வலுவாக்கும் கல்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம கூறுகள் உள்ளன. இந்நிலையில், ஊறவைத்த பேரிச்சம்பழத்தை தினமும் 1 மாதம் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இதய ஆரோக்கியம்
பேரீச்சம்பழத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
செரிமான ஆரோக்கியம்
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி குடல்களை சுத்தம் செய்ய உதவுகிறது. ஊறவைத்த பேரீச்சம்பழத்தை உட்கொள்வது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரீச்சம்பழம் ஒரு இயற்கை தீர்வாகும். இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமான இது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. ஊறவைத்த 4 பேரீச்சம்பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தக் குறைபாடு நீங்கி சரும ஆரோக்கியம் மேம்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி
விற்றமின் (B6, A, K) மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பேரீச்சம்பழத்தில் காணப்படுகின்றன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
உடல் எடையை அதிகரிக்க உதவும்
உடல் பலவீனமாக உள்ளவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு பேரிச்சம்பழம் சிறந்த உணவாகும். இதில் நல்ல அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது தசைகளை வலுப்படுத்தவும் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.
இளமையை காக்க உதவும்
பேரீச்சம்பழத்தில் உள்ள விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இது சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
பேரிச்சம்பழத்தை சாப்பிடும் முறை
4 பேரீச்சம்பழங்களை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடுங்கள். பேரீச்சம்பழத்தின் சத்துக்கள் நீரில் கரைந்து விடுவதால், பேரீச்சம்பழத்தை ஊற நீரையும் குடிக்கலாம்.