மக்களின் அனைத்து செயற்பாடுகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” திட்டம் என்ற சந்தேகம் எழுகின்றது என யாழ் நகர் பகுதியில் பழக்கடை வியாபாரம் நடாத்தும் வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பழக்கடை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் கடைகளின் இட அளவினை மாநகர சபையினர் குறைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது கடைகளை மூடி இன்றைய தினம் வியாழக்கிழமை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போதே வியாபாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
இவ்விடத்தில் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட போது, யாழ். மாநகரசபைக்கு ஆரம்பதில் 3ஆயிரம் ரூபாவும் தற்போது 7500 ரூபாவும் வரியாக செலுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் தற்போதும் மேலும் 300 ரூபா வரி உயர்வு என கூறுகின்றனர் அதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இங்கு 31 கடைகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 100 பேர் தொழில் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது.
இந்நிலையில் சில காலத்திற்கு முன், கடைகளின் முகப்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்ததற்கு இணங்க அதையும் சில அடிகள் உள்ளே எடுப்பதற்கு ஒப்புக்கொண்டு உள்ளே எடுத்தோம்.
தற்போது, யாழ். மாநகரசபையின் அதிகாரிகள் எமது கடைகளின் அளவை அதாவது அகலத்தை குறைத்து அடையாளமிடும் நடவடிக்கையை நேற்றைய தினம் புதன்கிழமை முன்னெடுத்தினிருந்தனர். அதற்கு நாம் எதிர்ப்பு காட்டியதை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே 6 அடிகள் தான் ஒரு கடைக்கான இடப்பரப்பாக வழங்கப்பட்டது.இந்த 6 அடிகள் பொருட்கள், பழங்களை வைத்து விற்பனை செய்யும் தளபாடங்கள், குறைந்தது 3 வியாபாரிகள் என வியாபார நடவடிக்கைகளை கடும் சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.
தற்போது, அந்த 6 அடி அகலத்ததையும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க தற்போது முயற்சி எடுத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்
எமது வியாபர நடவடிக்கைக்காக பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன் வருமானத்தை வைத்தே பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள்.
நாட்டை சுத்தம் செய்வோம் என கோசமிட்டு எமது வாக்குகளை வசப்படுத்தி வெற்றியீட்டிய அனுர தலைமையிலான அரசாங்கம் தான் கூறிய வாக்கறுதிகளை மீறி எம்மை ஏமாற்றிவருகின்றது.
அனுர அரசின் கட்டளைப்படியே தாம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறாயின் மக்களின் அனைத்து செயற்பாடுகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” திட்டம் என்ற சந்தேகம் எழுகின்றது.
நாம் நாட்டுக்கு சுமையாக இருக்கவில்லை. வேலை வாய்ப்பு தா என கோரவில்லை. அதற்காக வீதியில் இறங்கி போராடவும் இல்லை. சுய தொழில் நடவடிக்கைகளையே எம்மால் முடிந்த முதலீடுகளை செய்து முன்னெடுத்து வருகின்றோம்.
எமக்கான நியாயம் கிடைக்காவிடின் நியாயத்திற்காக நாம் எம்மால் முடிந்தவரை தொடர்ந்தும் போராடுவதற்கு தயாராகவே இரக்கின்றோம் என தெரிவித்தனர்.