மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள தென்பகுதியில் இருந்து சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை(28) மன்னாரிற்கு வருகை தந்தனர்.
வருகை குறித்த குழுவினர் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெறுகின்ற பகுதிகளுக்கு கள விஜயத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவில் இன்றைய தினம் புதன்கிழமை (29) காலை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் அடிகளார் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர்,பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பு, பொது அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் மன்னார் தீவு பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கலந்துரையாடப்பட்ட விடையங்கள் குறித்து தெளிவு படுத்தினர்.
இதன் போது கலந்து கொண்ட பிரதிநிதிகள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம மண் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்பட்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து தெரிவுபடுத்தினர்.
குறிப்பாக காற்றாலை மின் உற்பத்தியால் மீனவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளடங்களாக மன்னார் தீவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னாரில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மண் அகழ்வினால் மன்னார் தீவு அழியும் நிலை உள்ளமை குறித்தும் தெரிவுபடுத்தப்பட்டது.
கனிய மணல் அகழ்வினால் ஒரு கட்டத்தில் கடல் நீர் கிராமங்களுக்குள் ஊடுருவும் நிலை உள்ளமை குறித்தும் குறித்த குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் அடிகளார் மற்றும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக மன்னார் தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இப்பகுதியில் தேவையில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக குறித்த விடயம் குறித்து தம்முடன் இணைந்து கடமையாற்றி வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் அடிகளார் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ் விடங்களை பாதிக்காத வகையில் பெரு நிலப்பரப்புகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் .மேலும் கனிய மணல் அகழ்வை நாங்கள் முற்று முழுதாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.