அவிசாவளை வித்தியால மாவத்தையில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கியிருந்த இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் சூரியகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்த இளைஞனுக்கும், தங்குமிடத்தில் தங்கியிருந்த இளைஞர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் வேலை வாய்ப்பு காரணமாக இரண்டு மாத காலமாக குறித்த விடுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.