சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கசுன் ராஜிதவுக்கு முதுகில் உபாதை ஏற்பட்டது. இந்நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜித நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில் இடம் பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சில்ஹெட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ராஜிதவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டிருந்த போதும் அவர் உபாதைக்கு மத்தியில் இரண்டு இனிங்ஸ்களிலும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ராஜித ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியமை இலங்கை அணி , சிறப்பான வெற்றியைப் பெறுவதில் முக்கியமாக அமைந்தது.
அசித்த பெர்னாண்டோ இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் 26.85 சராசரியில் 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16.61 சராசரியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.