உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் வைத்தியசாலை அதிகாரியின் தகவல்களுக்கு அமைய மத்திய காசாவின் டெய்ர் எல்-பலஹாவிலுள்ள (Deir el-Balah ) அல்-அக்ஸா வைத்தியசாலையின் வளாகத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எட்னோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஊடகவியலாளர்கள் சிலரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் காலித் அல்-டக்ரான்(Khaled al-Dakran) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவினரால் இயக்கப்படும் தளத்தை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி மற்றும் ஊடகவியலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த கூடாரத்தின் மீது வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக காஸாவிலுள்ள அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.