சிதைவடைந்து வரும் நீர் மற்றும் வீதி உள்கட்டமைப்புகளை சீரமைக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் மொன்றியலின் 2027 நகரசபை வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 24 அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
நவம்பர் முற்பகுதியில் தமது நிறைவேற்றுக் குழுவிடம் பேசிய மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெராடா, தற்போதைய நிலையில் தொடர முடியாது என்பதால் நகரசபை மாதிரி மாற வேண்டும் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தில் கடினமான தெரிவுகள் இருக்கும் என்றும், அத்தியாவசியச் சேவைகளைப் பாதுகாத்தல், உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் மற்றும் தொடங்கிய பணிகளைத் தொடர வழிவகை செய்தல் ஆகியவை முன்னுரிமைகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொன்றியல் நகரசபையின் உள்ளக அறிக்கையின்படி, நீர் வலையமைப்பைப் பராமரிக்கத் தேவையான நிதியில் பாதியளவே தற்போது வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. வீதிகளின் நிலை மற்றும் பனி அகற்றும் பணிகளின் தரம் குறித்து மார்டினெஸ் ஃபெராடா நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதனை முந்தைய நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட பராமரிப்புப் பற்றாக்குறை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வீதிப் பள்ளங்களைச் சீரமைக்கும் திறனை இரட்டிப்பாக்க இலக்கு கொண்டுள்ளதாக மேயர் தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் குளிர்காலத்தில் பனி அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 43 பனி அகற்றும் இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
உள்கட்டமைப்பு விடயத்தில் நகரசபையின் நிதி ஒதுக்கீடு நாள்பட்ட பற்றாக்குறையாக உள்ளதாகக் கியூபெக் பொருளியலாளர்கள் சங்கத்தின் பொதுக் கொள்கைத் தலைவர் லூயிஸ் லெவெஸ்க் தெரிவித்துள்ளார். சொத்து வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு சில தெரிவுகளே உள்ளதாகவும், சிதைவடைந்த நிலை மோசமாக இருப்பதால் காத்திருக்க நேரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
2025 நகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மேயரான மார்டினெஸ் ஃபெராடாவின் நிர்வாகம், ஜனவரியில் 7.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது முதல் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில் வீடற்ற நிலையை எதிர்கொள்ளுதல், வீடமைப்பு மற்றும் வட்டாரச் சேவைகளுக்கான அதிகரிப்புகள் இடம்பெற்றிருந்தன.
தற்போதைய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக நிறைவேற்றுக் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் வரி உயர்வு குறித்துக் கவலை தெரிவித்து ஒரு வட்டார மேயர் அவரது கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
