ஒன்பது மாத காலத் தலைமைத்துவப் போட்டியின் முடிவில், ஒன்ராறியோ லிபரல் கட்சியின் புதிய தலைவராக நவ்தீப் பெயின்ஸ் (Navdeep Bains) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவ மாநாட்டில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்று வாக்கெடுப்பில், தமக்கு அடுத்தபடியாக வந்த மாகாண சபை உறுப்பினர் லீ ஃபெயார்க்ளோவை (Lee Fairclough) விட ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் (50.3 சதவீதம்) பெயின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றியைத் தொடர்ந்து, ரொறன்ரோ நகர மத்தியில் கூடியிருந்த 1,000-க்கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இது தலைமைத்துவப் போட்டியின் முடிவாக இருந்தாலும், டக் ஃபோர்ட் (Doug Ford) மற்றும் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தை மாற்றுவதற்கான தமது பிரச்சாரத்தின் ஆரம்பம் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நவ்தீப் பெயின்ஸுக்கு சமூக வலைத்தளமான எக்ஸ் (X) ஊடாக வாழ்த்துத் தெரிவித்துள்ள மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், வரிகளை எதிர்கொள்ளவும், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் கட்சி பேதமின்றி இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை நடைபெற வாய்ப்புள்ள அடுத்த தேர்தலுக்குக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள பெயின்ஸுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன.
குறிப்பாக, தமது முன்னைய இரண்டு தலைவர்களைப் போலவே இவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை.
எனினும், பொருத்தமான நேரத்தில் உரிய தொகுதியைத் தெரிவு செய்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் 2015 முதல் 2021 வரை மத்திய அமைச்சராகவும், 13 ஆண்டுகள் மிசிசாகா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய பெயின்ஸின் கடந்த கால அரசியல் தொடர்புகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை ஆரம்பித்துள்ளன.
50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒன்ராறியோவிற்குக் குடிபெயர்ந்த தமது பெற்றோரின் கடின உழைப்பையும், ஒன்ராறியோ வழங்கிய வாய்ப்புகளையும் நினைவுகூர்ந்த பெயின்ஸ், தற்போது தமது மிசிசாகா சமூகத்தில் நான்கில் ஒருவர் உணவு வங்கிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
