குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வரும் நபர்கள், கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிப்பதற்காக இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என அறிவித்தல் விடுத்துள்ளது.
இத குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர சேவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு சமர்ப்பிப்பதற்கான டோக்கன்கள், பத்தரமுல்லை தலைமையகத்தில் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 18 முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவை, மே 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதன்படி, சாதாரண சேவை விண்ணப்பங்கள் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை தலைமையகத்தில் ஏற்கப்படுகின்றன.
ஒரு நாள் சேவையின் கீழ் ஏற்கனவே திகதி முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அவசர அல்லது முன்னுரிமை தேவைகள் உள்ள விண்ணப்பதாரர்களும் இந்த நேரத்தில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உள்ளேயோ வெளியேயோ உள்ள எந்தவொரு தரகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தேவையான கட்டணத்தை தலைமையகத்தில் மட்டும் செலுத்தி, பணம் செலுத்தியதற்கான ரசீதை பெற்று, கடவுச்சீட்டு வழங்கும் கவுண்டரில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
