உக்ரைன் மீதான போர் தொடரும் வரை கனடாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குறிப்பாக, எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் மற்றும் ரெட்டும் நகர்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி (World Junior Hockey Championship) போட்டிகளில் ரஷ்ய அணி அனுமதிக்கப்படாது என்று பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உறுதிப்படுத்தினார்.
“உக்ரைனில் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற போரைத் தொடரும் ரஷ்யா மற்றும் பெலாரஸுக்கு ஆதரவாக எந்தவொரு வீரரும் கனடா மண்ணில் தங்களது நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
மேலும், பின்லாந்து, சுவீடன், செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஹாக்கி கூட்டமைப்புகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதையும், போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பதையும் தாங்கள் மதிப்பதாகவும், இருப்பினும் கனடா தனது சொந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
