கியூபெக் நகர் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 மாதக் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் காப்பகப் பெண் ஊழியருக்கு, ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின்படி, குற்றவாளி குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்குப் பரோலில் வெளிவர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் நகரின் போபோர்ட் (Beauport) பகுதியில் இல்லப் பிள்ளைக்காப்பகம் நடத்தி வந்த கெனுயிட் முப்வாகா (Guenuite Mubwaka) என்ற பெண்ணே இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.
குழந்தையின் மரணம் தொடர்பில் குற்றச்சாட்டை அவர் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பும், சந்தேகநபரின் தரப்பும் இணைந்து வழங்கிய தண்டனைப் பரிந்துரையானது, மிகவும் இலகுவானது என கியூபெக் உயர்தர நீதிமன்ற நீதிபதி பிரான்சுவா ஹூவோ (François Huot) கருத்துத் தெரிவித்தார்.
இந்தத் தண்டனைக்காலம் 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனக் குறிப்பிட்ட நீதிபதி, எனினும் வழக்கின் மேல்முறையீட்டு நடைமுறைகளைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மேலும் நீண்ட காலம் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே இந்த உடன்பாட்டுத் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
