மொண்ட்ரியல் பொலிஸ் சேவையில் 7 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டமையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக, மொண்ட்ரியல் காவல்துறை அதிகாரிகள் தொழிற்சங்கம் (Montreal Police Brotherhood) அறிவித்துள்ளது.
அண்மைய மாதங்களில் மொண்ட்ரியல் காவல்துறைச் சேவையை அபகீர்த்திக்கு உள்ளாக்கிய அடுத்தடுத்த சர்ச்சை சம்பவங்களைத் தொடர்ந்து, உள்நாட்டு ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் 7 காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மொண்ட்ரியல் காவல்துறைத் தலைவர் ஃபடி டாகர் (Fady Dagher) அறிவித்திருந்தார்.
மேலும், இது தொடர்பில் குற்றவியல் விசாரணைகளும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், காவல்துறை திணைக்களத்தின் இந்த நடவடிக்கை, தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்கு மாறானது என, மொண்ட்ரியல் காவல்துறை அதிகாரிகள் தொழிற்சங்கம் (Montreal Police Brotherhood) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ஈவ்ஸ் ஃபிரான்கோயர் (Yves Francoeur) உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள உள்வட்ட சுற்றறிக்கையில், ”காவல்துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணிநீக்க நடைமுறையானது தொழிலாளர் உறவுகள் வரலாற்றிலேயே அறிந்திராத ஓர் அணுகுமுறை” என்று கூறியுள்ளார்.
நிர்வாகத்தின் முடிவை சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்த உள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, மொண்ட்ரியல் காவல்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
