மொண்ட்ரியல் நகரை நோக்கிச் செல்லும் ஒனாரே-மெர்சியே பாலத்தில் (Honoré-Mercier Bridge) பராமரிப்புப் பணிகளின் போது, அதன் உருக்கிரும்பாலான உத்திரப் பகுதியில் விரிசல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதன் இடது பக்கப் போக்குவரத்துப் பாதை, மறுஅறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இதனால் தெற்கு கரைப் பகுதியில் (South Shore) இருந்து தினசரி வேலைக்குச் செல்வோரும் வாகனச்சாரதிகளும் பெரும் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்க நேரிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பாலத்தின் கட்டமைப்பில் இந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதாக கியூபெக் மாகாண போக்குவரத்து அமைச்சு (Quebec’s Transport Ministry) அறிவித்துள்ளது.
பாலத்தின் மீதுள்ள அழுத்தத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த உடனடிப் பாதை மூடப்பட்டுள்ளது என்று அமைச்சின் பேச்சாளர் லூயிஸ்-ஆண்ட்ரே பெர்ட்ராண்ட் (Louis-André Bertrand) தெரிவித்தார்.
மேலும், பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரவு நேரங்களில் தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.
