அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடாவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வர்த்தகப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என மிச்சிகன் மாநில செனட்டர் பதவிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரொஜர்ஸ் (Mike Rogers) பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் ரொஜர்ஸ், வர்த்தகக் கொள்கையில் டொனால்ட் ட்ரம்ப்பின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாகப் பகிரங்க எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளார்.
மிச்சிகன் செனட் தேர்தலுக்கான பிரசாரத்தின் பகுதியாக வெளியிடப்பட்டுள்ள 30 வினாடிகள் கொண்ட புதிய விளம்பரக் காணொளியில், “கனடா ஒன்றும் எதிரி நாடல்ல என்பது மிச்சிகன் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த வரிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று ரொஜர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மிச்சிகனின் செனட்டராகத் தேர்வாகும் பட்சத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைப்பதற்காக, இரு தரப்பினரையும் இணைத்துச் செயற்படுவதே தனது முதல் பணியாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, ரொஜர்ஸின் இந்த விளம்பரக் காணொளி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ரொஜர்ஸின் கருத்தை தாம் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

