வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் 3,978,110 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகளை விரைவுபடுத்தும் நோக்கில் வெடிபொருள் அகற்றும் பணிகள் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களில் ஒன்றான ‘ஸார்ப்’ (SHARP) நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவனம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2026 செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இந்த வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம், கொக்காவில் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும், யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள கெற்பேலி பகுதியிலும் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளிலேயே இதுவரை 3,978,110 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

