கனடியக் கவிஞரும் கட்டுரையாளருமான 76 வயதான ஆன் கார்சனுக்கு(Anne Carson) இலக்கியத்திற்கான நோபல் பரிசு வியாழக்கிழமை ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தொன்மைச் பாரம்பரியத்துடனான விளையாட்டுத்தனமான உரையாடலின் மூலம், நவீன இலக்கியத்திற்கான புதிய வடிவங்களை உருவாக்கிய இவரது தைரியமான மற்றும் புதுமையான படைப்புகளுக்காக” இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரோண்டோவைச் சேர்ந்த ஆன் கார்சனின் முதல் கவிதை நூல் ‘கனிகுலா டி அன்னா’ (Canicula di Anna) 1984 இல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, 1986 இல் வெளியான ‘ஈரோஸ் தி பிட்டர்ஸ்வீட்’ (Eros the Bittersweet) என்ற கட்டுரைகளின் தொகுப்பு மூலம் சர்வதேச அளவில் அறியப்பட்டார்.
கிரேக்க மற்றும் லத்தீன் படைப்புகளை மொழிபெயர்த்தல், ஓபரா இசைநாடகங்களுக்கான தழுவல்கள் எனப் பல துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார்.
2002 ஆம் ஆண்டில் ‘தி பியூட்டி ஆஃப் தி ஹஸ்பண்ட்’ (The Beauty of the Husband) படைப்பிற்காக பிரித்தானியாவின் ‘டி.எஸ். எலியட் விருதை’ வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும் 2020இல் கவர்னர் ஜெனரல் விருதையும், PEN அமெரிக்கா இலக்கிய விருதையும் இவர் வென்றுள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள ஆன் கார்சனுக்கு பார்கின்சன் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் ரிவியூ ஆஃப் புக்ஸ் கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டு நோபல் பரிசு தொகையாக 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோன்கள் (சுமார் 1.7 மில்லியன் கனடிய டொலர்கள்) வழங்கப்படவுள்ளன.
டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில் விருதுகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

