பிரதமர் நரேந்திர மோடியுடன் தமது புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகத் தெரிவித்து பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் தலைவர்களான சௌரவ் தாஸ், அபிஜீத் திப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் ரத்னா சிங் ஆகியோர் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது தமது புகைப்படத்தை அனுமதியின்றி எடுத்து, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடியுடன் இருப்பது போல் மார்பிங் செய்து போஸ்டர்களாகப் பயன்படுத்தியதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிரீஷ் கத்பாலியா, இது ஒரு பெண்ணின் பிரச்சனை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரோடும் தொடர்புடைய உணர்வுபூர்வமான விவகாரம் எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சிஜேபி அமைப்பின் குறிப்பிட்ட நான்கு நிர்வாகிகளுக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அத்துடன், சம்பந்தப்பட்ட ஆபாச மற்றும் மார்பிங் புகைப்படங்களை 24 மணி நேரத்திற்குள் தமது தளங்களில் இருந்து உடனடியாக அகற்றுமாறு மெட்டா(Meta) நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகப் மனுதாரர் தெரிவித்ததை அடுத்து, அவருக்குத் தேவையான முழுமையான பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு டெல்லி பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர் (FIR) மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு தொடர்பாகவும் அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
