தமிழகத்தின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணையை, நாளைய தினமும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நேற்று முதல் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம், வாக்கு மூலம் பெறப்பட்டு வருகிறது.
அதற்கமைய, புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரிடம் நேற்று காலையில் ஆரம்பித்த விசாரணை இரவு 7.25 வரை நீடித்தது
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் விசாரணை நடைபெற்றது.
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், நாளையதினமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட 4 பேரும் நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகினர்.
இதன்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது.
அதற்கமைய, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், காவல்துறையினரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளே, 41 பேரின் உயிரிழப்புக்கு காரணம் என, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
