மொண்ட்ரியல் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில், 40 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, மொண்ட்ரியல் காவல்துறை (SPVM) சந்தேகத்திற்குரிய இறப்பு வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
வில்-மேரி (Ville-Marie) பகுதிக்குட்பட்ட ரானே-லெவெக் பூலேவார்ட் (René-Lévesque Blvd.) மற்றும் செயிண்ட்-கிரிஸ்டோஃப் தெரு (Saint-Christophe St.) சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ள பெண் ஒருவரின் நலன் குறித்து அறிவதற்காக (Wellness check), காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அந்த வீட்டின் உள்ளே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எவ்வித அசைவுமன்றி உணர்வற்ற நிலையில் கிடப்பதைக் கண்டறிந்தனர்.
உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர், அப்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனர்.
இறந்த பெண்ணின் உடலில் காயம் அல்லது வன்முறைக்கான அறிகுறிகள் காணப்பட்டதா என்பது குறித்த விவரங்களை காவல்துறை உடனடியாக வெளியிடவில்லை என்றாலும், இந்த மரணத்தை அவர்கள் “சந்தேகத்திற்குரிய மரணம்” (Suspicious death) என்றே உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


