லவால் (Laval) நகரில் அமைந்துள்ள கரேஃபோர் மல்டிஸ்போர்ட்ஸ் (Carrefour Multisports) விளையாட்டு மையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
லவால் நகரின் சோமேடி (Chomedey) பகுதியில் உள்ள பிரபல விளையாட்டுப் பயிற்சி மையத்தின் வாகன நிறுத்துமிடத்தில், இந்த குற்றச்செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவரைக் இலக்கு வைத்தே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாகக் காலை 8:40 மணியளவில் அவசர உதவி இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, லவால் நகர காவல் துறையினர் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக அருகில் உள்ள
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.காயமடைந்த நபரின் நிலைமை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
அத்துடன், இத்தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டையை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணைகள் கியூபெக் மாகாணக் காவல்துறையிடம் (Sûreté du Québec) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் திட்டமிட்ட குற்றக் குழுக்கள் (organized crime) அல்லது
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதல்களுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் கியூபெக் மாகாணக் காவல்துறையினர்
தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


