கியூபெக் மாகாண சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமாக, 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 908 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக மாகாணத் தேர்தல் ஆணையமான ‘எலெக்ஷன்ஸ் கியூபெக்’ (Élections Québec) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள 127 தொகுதிகளிலும் சராசரியாக தொகுதிக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் மொன்றியலில் உள்ள ‘வெர்டூன்’ (Verdun) தொகுதியில் அதிகபட்சமாக 13 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
எந்தவொரு கட்சியையும் சாராத 19 சுயேச்சை வேட்பாளர்களும் இத்தேர்தலில் களம் காண்கின்றனர்.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 386 பேர் பெண்கள் எனவும் இது மொத்த வேட்பாளர்களில் 43 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகளில் ‘கியூபெக் சொலிடேர்‘ கட்சியே, அதிகபட்சமாக 75 பெண் வேட்பாளர்களை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.
ஆளும் கட்சி 69 பெண்களையும் பார்ட்டி கியூபெக்கோவா கட்சி 58 பெண்களையும் இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளன.
தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின்படி, பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு வேட்பாளரையாவது நிறுத்தத் தவறும் அரசியல் கட்சிகள் தங்களது அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை இழக்கும்.
இதன்படி, இத்தேர்தலில் ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்தாத ‘பார்ட்டி பாப்புலேர் து கியூபெக்’ (Parti populaire du Québec) கட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.


