முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை நடைபெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் நிகழ்வு நடைபெற்றது.
இந்திய அரசின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு, கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபை ஆகும். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 18.04.2026 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், சுகாதார அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.08.2026 அன்று கைச்சாத்திடப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் 50.7 மீற்றர் நீளமும் 20.4 மீற்றர் அகலமும் கொண்ட நான்கு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. தரைத்தளத்தின் பரப்பளவு 10,465 சதுர அடி என்பதுடன், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களின் ஒவ்வொன்றினதும் பரப்பளவு 10,145 சதுர அடி என திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ வளாகத்தில் மொத்தம் 285 படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதன்படி, தரைத்தளத்தில் 66 படுக்கைகளும், முதலாம் தளத்தில் 73 படுக்கைகளும், இரண்டாம் தளத்தில் 73 படுக்கைகளும், மூன்றாம் தளத்தில் 73 படுக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இதனுடன் பரிசோதனை அறைகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் அடிக்கல் நடும் நிகழ்வில், விருந்தினர்கள் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்ட பின்னர் கட்டடத் தளத்தில் அடிக்கல் நடுகை செய்யப்பட்டு நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.
மேலும், நிகழ்வின் போது முக்கிய விருந்தினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகளும் நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் மூலம் இலங்கை – இந்திய ஒத்துழைப்பின் கீழ் வடக்கு மாகாணத்தில் சுகாதார உட்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான மற்றுமொரு முக்கிய முன்னெடுப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை நீண்டகால அடிப்படையில் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கான தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகள் குறிப்பிடத்தக்க வகையில் விரிவடையும்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், மாகாணப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவமனையின் அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


