கியூபெக் மாகாணத்தில் வாழும் ஆங்கிலம் பேசுபவர்களின் வாக்குரிமையை, இந்த ஆண்டு பிரெஞ்சு மொழியில் மட்டுமே வாக்காளர் தகவல்களை அஞ்சல் மூலம் அனுப்பும் எலெக்ஷன்ஸ் கியூபெக் (Élections Québec) அமைப்பின் திட்டம் பாதிக்கும் என கியூபெக் சிவில் நீதிமன்ற நீதிபதி சில்வைன் லூசியர் (Sylvain Lussier) தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை காலை வழங்கிய தீர்ப்பில், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் தேர்தல் நினைவூட்டல் அட்டைகளைத் தயார் செய்யுமாறு எலெக்ஷன்ஸ் கியூபெக் அமைப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டார். மாகாணத்தின் மொழிச் சட்டங்களுக்குக் கட்டுப்படும் வகையில், பொதுத் தேர்தல் ஒன்றில் முதன்முறையாக பிரெஞ்சு மொழியிலான ஆவணங்களை மட்டுமே அஞ்சல் மூலம் அனுப்பவுள்ளதாக இந்த மாதத் தொடக்கத்தில் அந்த அமைப்பு அறிவித்திருந்தது.
ஆங்கிலம் பேசும் வாக்காளர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் தகவல் தெரிவிப்பதனால் பிரெஞ்சு மொழியின் அந்தஸ்து பாதிக்கப்படாது என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொது நிறுவனங்களுக்கான ஒரே தொடர்பு மொழியாக பிரெஞ்சை கட்டாயப்படுத்தும் சாசனப் பிரிவில் இருந்து விலக்கு அளித்து, 10 நாட்களுக்கு மட்டும் பகுதி அளவிலான தற்காலிக இடைக்காலத் தடையாணையை அவர் வழங்கியுள்ளார்.
இவ்வழக்கின் மனுதாரர், TALQ என அழைக்கப்படும் கியூபெக் சமூகக் குழுக்களின் நெட்வொர்க்கின் முன்னாள் தலைவர் ஜெஃப்ரி சேம்பர்ஸ் (Geoffrey Chambers) ஆவார்.
மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் வழிகாட்டி, பதிவுக் அறிவிப்பு மற்றும் நினைவூட்டல் அட்டை ஆகிய மூன்று ஆவணங்கள் அனுப்பப்படுகின்றன. இதில் முதல் இரண்டு ஆவணங்களின் ஆங்கிலப் பதிப்பை தயாரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்களிக்கும் மையம் குறித்த விவரங்கள் அடங்கிய நினைவூட்டல் அட்டைகளை மட்டுமே இரு மொழிகளிலும் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி மக்கள் வாக்களிக்கச் செல்கின்றனர்.
புரிந்துகொள்ளக்கூடிய தகவல்கள் இல்லாத நிலையில், பெருந்திரளான வயதான ஆங்கிலேயர்களால் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது என்பது தெளிவு என நீதிபதி லூசியர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் முடிவை ஆராயப்போவதாகவும், பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பில் உறுதியாக இருப்பதாகவும் கோலிஷன் அவெனிர் கியூபெக் (Coalition Avenir Québec) அரசாங்கம் தெரிவித்துள்ளது. வழக்கின் முதன்மை அம்சம் குறித்தான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


