விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டுத் தொடர் விடுமுறைக்குப் பின்னர் பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களும் சேர்ந்து 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளியூர்களுக்கான பொதுமக்களின் பயணம் அதிகரித்ததைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்குக் கடந்த வியாழக்கிழமை 585 சிறப்புப் பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 1,255 பேருந்துகளும், 12-ஆம் திகதி 1,030 பேருந்துகளும், 13-ஆம் திகதி 650 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதேபோன்று கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 585 பேருந்துகளும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்குத் தலா 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் 14-ஆம் திகதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப 765 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப வசதியாகத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நாளை 2,240 சிறப்புப் பேருந்துகளும், நாளை மறுநாள் 1,325 சிறப்புப் பேருந்துகளுமாக மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படவுள்ளன.

