இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தினால் இன்று (16) வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், ஏனைய கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையும் என்ற கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில், அந்தக் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கை தமிழர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக, மாநில அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் இலங்கைத் தமிழர்கள் பெறுவதை உறுதி செய்ய முடியும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடமைகளை காப்பதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான அழுத்தங்களை தமது கட்சி வழங்கும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன ரீதியாக நிலவும் பாகுபாடுகளை களைய, ஒன்றிய அரசு ஊடாக தமிழக வெற்றிக் கழகம் உரிய முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அமைய, மன்னார் வளைகுடாவில் தமிழக கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க அழுத்தம் கொடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமையை தக்கவைப்பதற்கு, தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்வதற்காக, உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அதன் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
