எதிர்காலப் போர்ச் சூழல்களுக்கு தன்னை ஆயத்தப்படுத்தும் நோக்கில், புவியியல் நிலப்பரப்பு அடிப்படையிலான நிர்வாக அமைப்பிலிருந்து, குறிப்பிட்ட போர் இலக்குகளை மையமாகக் கொண்ட புதிய கட்டமைப்புக்குக் கனேடிய இராணுவம் உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது.
தசாப்தங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரிய மறுசீரமைப்பின் கீழ், விரைவாகப் போர்க்களத்திற்குச் செல்லக்கூடிய புதிய இராணுவப் பிரிவு எட்மண்டன் (Edmonton) நகரைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கனேடியப் படைகளின் எட்மண்டன் தளத்தில் (CFB Edmonton) நடைபெற்ற அணிவகுப்பு மற்றும் உத்தியோகபூர்வ ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வின் போது ‘1-வது கனேடிய இராணுவப் பிரிவு’ (1st Canadian Division) முறைப்படி நிலைநிறுத்தப்பட்டது.
இந்தப் புதிய பிரிவு, பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள் மற்றும் அவசர நெருக்கடி நிலைகளின் போது உடனடியாகக் களமிறக்கப்படும் முதன்மைப் படையாகச் தொழிற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

