அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குக் கியூபெக் மாகாணம் ஒருபோதும் பணியாது என கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் (Christine Fréchette) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பதிலடி வரிகள் அமலுக்கு வந்துள்ள சூழலில், கியூபெக் மாகாணத்தின் வேலைவாய்ப்புகளையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க, தங்களின் வசமுள்ள அனைத்து அதிகாரங்களையும் கருவிகளையும் தமது அரசு முழுமையாகப் பயன்படுத்தும் என்றும் கியூபெக் முதல்வர் கிறிஸ்டின்
ஃப்ரெஷெட் உறுதியளித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களுக்கு ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவித்த கியூபெக் முதல்வர் ஃப்ரெஷெட், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கனடா விதித்துள்ள பதிலடி வரிகளால் கியூபெக் வர்த்தகக் கட்டமைப்பிற்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு, தமது அரசு
தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மொண்ட்ரியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான 'பாம்பார்டியர் (Bombardier) மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான சாடலை வெளியிட்டிருந்தார். அமெரிக்காவில் உற்பத்திகளை மேற்கொள்ளாவிட்டால் பாம்பார்டியர் விமானங்கள் அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்யப்பட அனுமதிக்கப்படாது என டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இது குறித்துப் பேசிய கியூபெக் முதல்வர் ஃப்ரெஷெட், ”டிரம்பின் இத்தகைய பதிவுகள் சில வேளையில் பெரிய கொள்கை மாற்றங்களுக்கான முன்னோடியாக அமையும்” என்றும், ”சில வேளையில் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாமல் முடிந்துவிடும்” என்றும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், நிலைமையை, தமது அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும், பாம்பார்டியர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியுடன் (CEO) தாம் ஏற்கனவே தொடர்பில் இருப்பதாகவும் கியூபெக்
முதல்வர் தெரிவித்தார்.

