‘ப்ளூ ஹேக்கிள் மாஃபியா’ என்ற பெயரில் இயங்கி வந்த ஃபேஸ்புக் குழுமம் தொடர்பான சர்ச்சையை அடுத்து, கனடிய இராணுவ படைப்பிரிவு ஒன்றின் தளபதி பதவி விலகியுள்ளார்.
ஒட்டாவாவை தளமாகக் கொண்ட ஒரு துணை இராணுவப் பிரிவின் உறுப்பினர்கள் இந்த குழுவில் வெறுப்புணர்வைத் தூண்டும் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
33 ஆவது கனடிய படைப்பிரிவு குழுமத்தின் தளபதியான கேர்ணல் ஜேம்ஸ் மெக்கே, கடந்த வார இறுதியில் தனது ஊழியர்களிடம் தான் பதவி விலகுவதாகத் தெரிவித்தார்.
” கேமரூன் ஹைலேண்டர்ஸ் ஆஃப் ஒட்டாவா” யூனிட்டின் உறுப்பினர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் யூத எதிர்ப்பு, பெண்கள் வெறுப்பு, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மற்றும் இனவெறி கருத்துக்களை, அப்பட்டமான புகைப்படங்களுடன் இடுகையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களின் பங்களிப்பு இருந்ததாகக் கூறப்படும் “ப்ளூ ஹேக்கிள் மாஃபியா” குழுமம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
கேமரூன் ஹைலேண்டர்ஸின் தளபதி, லெப்டினன்ட்-கேர்ணல் ரையன் ஹெண்டி, தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில், இராணுவ காவல்துறையும் இராணுவமும் தனித்தனி விசாரணைகளை நடத்தி வருகின்றன.
