கொழும்பு : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ‘எயார்பஸ்’ (Airbus) விமானக் கொள்வனவு ஊழல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.
5 மணி நேர விசாரணைக்குப் பின் கைது
இன்று முற்பகல் 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்கள்
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:
100 மில்லியன் ரூபாய் கைமாறியதா?, 2013-ல் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் 14 விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்ற இலஞ்சப் பணத்தில், சிங்கப்பூர் வங்கி கணக்கு வழியாக நிமல் பெரேரா என்பவரின் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
(சாட்சியம்)ஆஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேரா அளித்துள்ள சத்தியக்கடதாசியில், BIZ Solutions INC கணக்கில் இருந்து கிடைத்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 100 மில்லியன் ரூபாய்) தாம் நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ‘Airbus’ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.



