கியூபெக் மாகாண சட்டசபைத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மாகாணத்தில் அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், தனியார் மருத்துவத் துறைக்கான அரசின் நிதியுதவியை விரிவாக்கவுள்ளதாக ஆளும் ‘கோலிஷான் அவனீர் கியூபெக்’ (CAQ) கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
அக்கட்சியின் வேட்பாளரும் கியூபெக் முதலமைச்சருமான கிறிஸ்டின் ஃபிரெஷெட் (Christine Fréchette), செயிண்ட்-அல்போன்ஸ்-ரோட்ரிக்ஸ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது இப்புதிய கொள்கை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இப்புதிய திட்டத்தின்படி, எலும்பியல் (orthopedic) அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்காக 9 மாதங்களுக்கும் மேலாகப் பொது மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள், கியூபெக் அரசின் முழுச் செலவிலேயே தனியார் கிளினிக்குகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படும்.
தற்போதுள்ள நடைமுறையில் நோயாளிகள் வேறு பிராந்தியங்களுக்கு மாற்றப்பட 9 மாதங்களும், தனியார் துறைக்கு பரிந்துரைக்கப்பட ஓராண்டும் காத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில், புதிய திட்டம் இக்காத்திருப்பு காலத்தைக் கணிசமாகக் குறைக்கும் என, கியூபெக் முதல்வர் ஃபிரெஷெட் சுட்டிக்காட்டினார்.

