மொன்றியல் நார்த் (Montréal-Nord) பகுதியில் இயங்கிவந்த பொலிஸ் ரோந்துப் பிரிவினர் மீதான இனவெறி மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் பகுதியாக, நான்காவது பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, குறித்த அதிகாரியின் பணி இடைநீக்கம் கடந்த 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கலைக்கப்பட்ட 16 பேர் கொண்ட ரோந்துப் பிரிவில் இந்த அதிகாரி பணியாற்றியபோதே இக்குற்றச்சாட்டுகள் எழுந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொன்றியல் நார்த் பகுதியில் அமைந்திருந்த ‘நிலையம் 39’ (Station 39) பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 16 அதிகாரிகள், கறுப்பின மற்றும் அரபு இனத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எதிராக இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டதாகக் கடந்த ஜூன் மாதம் புகார்கள் வெளிவந்தன.
குறிப்பாக, வீதிகளில் சோதனையின்போது இனரீதியாக மக்களை இலக்கு வைத்ததுடன் (Racial profiling), சில சிறுபான்மையின குடிமக்களின் தலைமுடியை வெட்டி அதை வெற்றிச் சின்னமாக (Trophies) வைத்திருந்தனர் என்ற அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து, மொன்றியல் பொலிஸ் மா அதிபர் ஃபாடி டாகர் (Fady Dagher), அந்த ரோந்துப் பிரிவை உடனடியாகக் கலைக்க உத்தரவிட்டதுடன், அதில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தார்.
ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காவது அதிகாரியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எஞ்சிய அதிகாரிகள் நிர்வாகப் பணிகளுக்கு மாற்றப்பட்டதுடன், வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

