கியூபெக் மாகாண மோட்டார் வாகனக் காப்புறுதி வாரியத்தின் அமைப்பைப் பயன்படுத்தி 2,000-க்கும் மேற்பட்ட போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த மோசடித் திட்டம் தொடர்பாக, வாரியத்தின் இரு முன்னாள் பெண் ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் மீது தற்போது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தின் ஊழல் எதிர்ப்புப் பொலிஸ் பிரிவான UPAC நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்தே இக்காலகட்டத்தில் இடம்பெற்ற பெருந்தொகை ஊழல் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த மோசடிச் செயல்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் சோதனைகளின் போது, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் கனடிய, அமெரிக்க நாணயத்தாள்களாக மொத்தம் 1.1 மில்லியன் டொலருக்கும் அதிகமான ரொக்கப் பணம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

