அமெரிக்கா மற்றும் கனடா இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் பேச்சுகளுக்கு மத்தியில், கியூபெக்கின் இறையாண்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிவிட்டதாகக் கூறி, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டின் (Christine Fréchette) அரசை எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ) மிகக் கடுமையாக விமரிசித்துள்ளது.
கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டின் ஆட்சியானது, கியூபெக்கின் தனியுரிமை மற்றும் விவசாய, வர்த்தக நலன்களைப் பாதுகாக்காமல் மத்திய அரசுக்கு முற்றிலும் பணிந்து செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் (Paul St-Pierre Plamondon), குற்றம்சாட்டியுள்ளார்.
கியூபெக் மாநிலத்திற்கு உடனடியாக நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் போல் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இடம்பெறும் பேச்சுகளில் கியூபெக்கின் பாற்பண்ணை, வனத்துறை மற்றும் மதுபான விற்பனை உரிமைகள் சமரசம் செய்யப்படுவதாக அஞ்சப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கியூபெக்கில் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமெரிக்க வர்த்தக விவகாரம் மற்றும் கியூபெக்கின் தனித்துவக் கோரிக்கை ஆகியவை முதன்மைப் பிரச்சாரப் பொருளாக உருவெடுத்துள்ளன.

