மொன்றியல் மாநகரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சர்வதேச அளவிலான ‘UCI 2026 உலக சாலை சைக்கிள் ஓட்டப் போட்டியை’ நடத்தத் தயாராகி வரும் நிலையில், நகரின் போக்குவரத்து மற்றும் அன்றாடச் செயற்பாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என மாநகர அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த மெகா விளையாட்டுத் திருவிழா செப்டெம்பர் 20 முதல் 27 வரை எட்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
1976 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மொன்றியலில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாக இது கருதப்படுகிறது.
போட்டியின் முக்கிய மையமாகத் திகழும் மவுண்ட் ராயல் பூங்காவின் அடிவாரத்தில் உள்ள ‘அவென்யூ டு பார்க்’ (Avenue du Parc) வீதி, ‘அவென்யூ டெஸ் பின்ஸ்’ (des Pins) முதல் ‘மவுண்ட் ராயல்’ (Mont-Royal) வரையான பகுதியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை, ஒரு மாத காலத்திற்கு வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது.
போட்டிக்கான தற்காலிக மைதானத்தை அமைப்பதற்கும், பின்னர் அதனை அகற்றுவதற்குமான பணிகளுக்காக இந்த வீதி முடக்கம் அவசியமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது ஏற்படவுள்ள நெரிசல்களைத் தவிர்க்க, பொதுமக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்து மெட்ரோ (Metro) மற்றும் ஆர்.ஈ.எம் (REM) போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு மக்களை மாநகர சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

