மொன்றியல் நகரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில், பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த அங்காடியில் அவர் பணிபுரிந்த காலத்தில், இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயதினர் உடை மாற்றும் அறையில் இரகசியக் கேமராக்களைப் பொருத்தி ஆபாசமாகப் படம்பிடித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட அந்தப் பல்பொருள் அங்காடியின் ஊழியர் ஒருவர், உடை மாற்றும் அறையில் இருந்த சிறிய துளை ஒன்றின் வழியாக மின்கலத்தினால் இயங்கும் இரகசியக் கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து நிர்வாகத்திடமும், பின்னர் மொன்றியல் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் அந்த மேலாளரின் அறையிலிருந்து பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில், ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் படம்பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொன்றியல் பொலிஸார் (SPVM) இந்த விவகாரம் குறித்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், 34 வயதான அந்த முன்னாள் முகாமையாளர் மீது சட்டவிரோதமாகப் படம்பிடித்தல் (Voyeurism) மற்றும் அந்தரங்கத்தைப் பாதிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மொன்றியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

