கியூபெக் மாகாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ‘கேன்லேப் ரிசர்ச்‘ (Canlab Research) என்ற இணையவழி வணிக நிறுவனம், அனுமதி பெறாத ஊசி மூலம் செலுத்தும் ‘பெப்டைட்’ (Injectable Peptides) மருந்துகளை விற்பனை செய்வதற்கு, கியூபெக் உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
சுகாதார அமைப்பான ‘ஹெல்த் கனடா’ (Health Canada) தொடர்ந்த வழக்கில் கியூபெக் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியின்றி, பல்வேறு இணையதளங்கள் வாயிலாக நிரூபிக்கப்படாத மருத்துவக் கோரிக்கைகளுடன் பெப்டைட் மருந்துகளை இந்நிறுவனம் விற்பனை செய்து வந்ததாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமைச்சக உத்தரவு மற்றும் தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்ததை அடுத்தே, நீதிமன்றம் தற்போது நிரந்தரத் தடை உத்தரவை வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, ‘கேன்லேப் ரிசர்ச்’ நிறுவனமோ அல்லது அதன் பிரதிநிதிகளோ இனி அனுமதி பெறாத ஊசி வழி பெப்டைட் மருந்துகளை தயாரிக்கவோ, பரிசோதிக்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

