கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய காளான்களுக்கு (Fresh mushrooms) அமெரிக்க அரசு புதிதாக 8.26 சதவீத வரியை விதித்துள்ளதைத் தொடர்ந்து, கனடிய காளான் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடும் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்த வரி விதிப்பால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, கனடாவின் உள்நாட்டுச் சந்தையில் காளான்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடிய காளான் உற்பத்தியாளர்கள் அமெரிக்கச் சந்தையில் நியாயமற்ற முறையில் குறைந்த விலைக்குக் காளான்களை விற்பனை செய்கிறார்களா (Anti-dumping) என்பது குறித்து அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 14 ஆம் திகதி இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 17 ஆம் திகதி முதல் இந்த வரிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக ‘மஷ்ரூம்ஸ் கனடா’ (Mushrooms Canada) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட 2.84 சதவீத வரியைத் தொடர்ந்து, தற்போது இந்த புதிய வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

