சர்ச்சில் ஃபால்ஸ் (Churchill Falls) நீர்மின் உற்பத்தி வளாகம் தொடர்பான புதிய மின்னுற்பத்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடோர் மாகாண முதல்வர் டோனி வேக்கம் (Tony Wakeham) ஆகியோர் இன்று நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நடைபெறுகின்ற கனேடிய மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாகவே, இந்த இரு மாகாணத் தலைவர்களுக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்டின் பிரெஷெட் கியூபெக் முதல்வராகப் பதவியேற்றதன் பின்னர், நியூஃபவுண்ட்லேண்ட் முதல்வர் டோனி வேக்கமை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதன்முறையாகும். முந்தைய மாகாண அரசுகளால் 2024 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பூர்வாங்க மின்னுற்பத்தி உடன்படிக்கையை (MOU) மறுசீரமைப்பதே இச்சந்திப்பின் முதன்மை நோக்கமாகும்.
இப் பேச்சுவார்த்தை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கியூபெக் முதல்வர் பிரெஷெட், கியூபெக்கின் நலன்களில் எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இன்றி, இரு மாகாணங்களுக்கும் சமமான நன்மையளிக்கும் (Win-Win) புதிய ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளதாகக்” குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு மாகாணங்களின் பேச்சுவார்த்தைக் குழுக்களும் அண்மைய வாரங்களில் இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக இயங்கி வருவதாகவும் கியூபெக் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நியூஃபவுண்ட்லேண்ட் முதல்வர் டோனி வேக்கம் எவ்வித அவசரமான காலக்கெடுவுக்கும் தாம் கட்டுப்படப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது மாகாண மக்களுக்கு அதிகபட்ச நன்மையைப் பெற்றுத்தரும் சிறந்த ஒப்பந்தம் எட்டப்படும் வரை பேச்சுவார்த்தைக் குழுவினர் போதிய கால அவகாசத்தை எடுத்துக்கொள்வர் என்றும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டால் அது நியூஃபவுண்ட்லேண்ட் மக்களின் வாக்கெடுப்பிற்குப் (Referendum) விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



