கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) மற்றும் மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) ஆகியோருக்கு இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று மொன்றியல் மாநகர சபையில் நடைபெற்றது.
கியூபெக் மாகாண அரசுக்கும் மொன்றியல் மாநகரத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த கசப்புணர்வை நீக்கி, ஒரு புதிய இணக்கமான உறவை உருவாக்க இரு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர்.
தற்போது மொன்றியலின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு, தடுப்புச் சுவர்கள் அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மாகாண அரசின் நிதி உதவி மற்றும் ஒத்துழைப்பை மேயர் கோரினார்.
மொன்றியலில் அதிகரித்து வரும் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்க்க மாகாண அரசும் மாநகர சபையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினர்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ‘மொன்றியல் கனடியன்ஸ்’ (Habs) அணியின் சீருடையை அணிந்து வந்த இரு தலைவர்களும் விளையாட்டு மற்றும் அரசியல் ரீதியாக ஒரு சுமூகமான சூழலை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
