முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இன்கி மார்க் (Inky Mark) என்பவரது வீட்டில் இருந்து 439 துப்பாக்கிகள் மற்றும் ஒரு பழங்கால பீரங்கி உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்களை, நாட்டின் மத்திய பொலிஸ் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆயுதக் கடத்தல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருந்தமை உள்ளிட்ட சுமார் 12 குற்றச்சாட்டுகளின் கீழ் 78 வயதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மானிட்டோபாவின் டொபின் (Dauphin) நகருக்கு அருகில் அமைந்துள்ள இன்கி மார்க்கின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் போதே இந்த ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் சில சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டவை என்றும், ஒரு துப்பாக்கியின் தொடர் இலக்கம் (Serial number) திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இன்கி மார்க், தான் ஆயுதக் கடத்தலில் ஈடுபடவில்லை என்று மறுத்துள்ள போதிலும், மூன்று துப்பாக்கிகளை சட்டவிரோதமான முறையில் வேறு நபர்களுக்கு கைமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
துப்பாக்கிகளுடன் அவரது வீட்டில் இருந்து கனேடிய நாணயத்தில் 300,000 டொலருக்கும் அதிகளவிலான ரொக்கப் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
