அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க மதுபானங்கள் மீதான இறக்குமதித் தடையை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை கனடாவின் கியூபெக் மாநில முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதான வர்த்தகத் தடைகளையும், ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களையும் நீக்கும் வரை இந்தத் தடை தொடரும் என்பதில் கியூபெக் அரசு உறுதியாக உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பையும் உள்ளடக்கிய 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட்டுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கியூபெக் சந்தையில் அமெரிக்க மதுபானங்களுக்கான தடையை நீக்குவது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் சாதகமாக அமையும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகச் சிறந்த ஒயின்களை கலிபோர்னியாதான் தயாரிக்கிறது எனவும் இந்த உயர்தர ஒயின்களை நுகரும் வாய்ப்பு எமது அண்டை நாடான கனடாவின் நுகர்வோருக்குக் கிடைக்க வேண்டும் எனவும் கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் தாம்சன் (Mike Thompson) தெரிவித்தார்.
இந்த வர்த்தகப் போரினால் கலிபோர்னியா உற்பத்தியாளர்களும், கனடிய நுகர்வோருமே பாதிக்கப்படுகிறார்களே தவிர, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், அவர் குறிப்பிட்டார்.
கலிபோர்னியா மாநில செனட்டரான ஆடம் ஷிஃப் (Adam Schiff) கடந்த மாதம், கியூபெக் முதல்வர் பிரெச்செட்டுக்கு எழுதிய கடிதத்திலும் வர்த்தகப் போர்களைத் தவிர்த்து பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு கோரியிருந்தார். எனினும், இந்த அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என கியூபெக் தரப்பு அறிவித்துள்ளது.
