அண்டை மாகாணமான ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற மற்றும் போதிய பயிற்சி பெறாத லொறி ஓட்டுநர்களுக்கு, கியூபெக் அரசு கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கனரக வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாண போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஒன்டாரியோ மாகாணத்தில் ‘கிளாஸ் 1’ (Class 1) ரக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஓட்டுநர் அனுபவத்தைக் கொண்டிருப்பவர்கள் கியூபெக் மாகாணத்திற்குள் நுழைந்து தங்களின் உரிமத்தை மாற்றுவதற்கு (Exchange) விண்ணப்பித்தால், அவர்கள் இனி கியூபெக் வாகனக் காப்புறுதிச் சபையின் (SAAQ) செய்முறைத் தேர்வுகளில் (Practical exams) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்முறைத் தேர்வுகளில் இரண்டு முறை தோல்வியடையும் ஓட்டுநர்கள், கியூபெக்கில் மீண்டும் கட்டாயப் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒன்டாரியோவிலிருந்து கியூபெக்கிற்கு மாறும் கனரக வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் எவ்விதக் கேள்விகளுமின்றியோ அல்லது அவர்களின் பயிற்சியின் தரம் ஆராயப்படாமலோ தானியங்கி முறையில் உடனடியாக மாற்றப்பட்டு வந்தன.
இந்த நிலையிலேயே, கியூபெக் அரசின் இந்த புதிய விதிமுறை அமுலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

