பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பொலிசார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தின் போது வீதி அபிவிருத்தி பணிகள், சுகாதார வசதிகள், வீட்டு திட்ட முன்னேற்றங்கள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, விவசாயச் செய்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கடந்த காலத்தின் போது சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்ட வீடுகள் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால், குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகள் பல வருட காலமாக காத்திருப்பதாகவும், வீடுகளை விரைவில் படிப்படியாக பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கருணைநாதன் இளங்குமரன் குறிப்பிட்டார்.
நன்னீர் மீன்பிடி வளர்ப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநிதி இளங்குமரன் தெரிவிக்கையில்,
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளம் ஆகிய இரண்டினது புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மிக விரைவில் மக்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்குவதுடன் அவர்களது வாழ்வாதாரத்தையும் முன்னோக்கி செல்வதற்கான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

